தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: உயிரிழந்த சண்முகத்தின் உடலை ஒப்படைக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!
சென்னை உயர்நீதிமன்றம்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சண்முகத்தின் உடலை ஒப்படைக்கக் கோருதல், உடல்கள் மறு பிரேதப் பரிசோதனை கோருதல் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவு செய்தல், உயிரிழந்த சண்முகம் உடலை ஒப்படைக்கக் கோரிக்கை, உயிரிழந்தோரின் உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் இன்று விடுமுறைக்கால நீதிபதிகள் பாஸ்கரன், டீக்காராமன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், தனியார் மருத்துவர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு மூலம் மறு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணையும் கோரப்பட்டது. அப்போது விசாரணை குறித்த தற்போதைய நிலை அறிக்கையையும் 3 பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்த அரசு தலைமை வழக்கறிஞர் 3 பேரும் குண்டுக்காயத்துடன் உயிரிழந்ததாகவும் ஆனால் அவர்கள் உடலில் தோட்டாக்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற விதிமுறைப்படி உடற்கூறு ஆய்வு நடைபெற்றதாகவும், தனியார் மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூறு ஆய்வை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்நிலையில் சண்முகத்தின் உடலை ஒப்படைக்கக் கோரிய வழக்கிலும், மறு பிரேதப் பரிசோதனை கோரும் வழக்கிலும் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை மற்றும் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை கோரும் வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.