தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..!!லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும்..!!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அணில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அணில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்திற்கு எதிராகவும் இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி முதன்முறையாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. இதுகுறித்து செயல் தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான ஜான் மெக்டொனால்டு கூறியதாவது:
‘‘தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற படுகொலைக்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமாக அமைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.
வேதாந்தா குழுமம் பல நாடுகளில் முறைகேடான வகையில் சுரங்கங்களை தோண்டுவதும், சுற்றுச்சூலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. அமெனஸ்டி இண்டர்நேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும், மனித உரிமை மீறலுக்கு காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்ரிக்க நாடுகளிலும் வேதாந்தா நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அளவில் விதிமீறலில் ஈடுபடும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து டிலிஸ்ட் செய்து அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசு, அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இதுகுறித்து லண்டன் ‘தமிழ் மக்கள் அமைப்பு’ நிர்வாகி கார்த்திக் கமலக்கண்ணன் கூறுகையில் ‘‘ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பேரசையால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர், காற்று, மண் அனைத்தையும் கொடூரமான முறையில் அழிக்கும் இதுபோன்ற நிறுவனங்களை ஏற்க முடியாது. கார்பரேட் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அப்பாவி மக்கள் காலம் காலமாக உயிரழப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது’’ எனக் கூறினார்.