தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக மூடியது கண்துடைப்பு நாடகம் வைகோ குற்றச்சாட்டு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-வது கட்டமாக நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார்.
அவர் திறந்தவேனில் நின்று பேசும்போது கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு எடுக்கும் முடிவால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாகி விடும். கர்நாடக அரசு மேலும் 2 அணைகளை கட்டினால், நமது மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 21 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே போராடி வருகிறேன். இப்போதுதான் ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகளை மக்கள் கண்டுணர்ந்து, கொதித்தெழுந்து உள்ளனர். தற்போது இந்த நச்சு ஆலை இருமடங்கு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இது நடந்தால் தூத்துக்குடி மாவட்டமே அழிந்து விடும். மக்களின் போராட்டத்துக்கு ம.தி.மு.க. துணை நிற்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்காமல் தற்காலிகமாக மூடியது, கண்துடைப்பு நாடகம். இந்த நச்சு ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஓய மாட்டேன். எனக்கு கருப்பு கொடி காட்ட சில ஊர்களில் பா.ஜ.க.வினர் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலி என்பது தெரிகிறது. இந்த நச்சு ஆலையை விரட்ட, வருகிற 28-ந்தேதி தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு வைகோ பேசினார்.
பின்னர் ஆழ்வார்திருநகரியில் காமராஜர் சிலை முன்பு வைகோ பேசினார். அங்கு அவர் பேசும்போது, சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஒருவர், வாகனங்களுக்கு வழிவிடுமாறு கோஷம் எழுப்பினார். அவரிடம், ம.தி.மு.க. தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே வைகோ தனது பேச்சை நிறுத்தி விட்டு, அனைத்து வாகனங்களும் செல்ல வழி ஏற்படுத்தி, தொண்டர்களை அமைதி காக்கும்படி கூறினார். அனைத்து வாகனங்களும் சென்ற பின்னர், அவர் மீண்டும் பேசினார்.
அதன்பிறகு வைகோ நாசரேத் காமராஜர் பஸ் நிலையம் முன்பு பேசினார். பின்னர் அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் நாசரேத் துரை வீட்டுக்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் பேய்க்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, உடன்குடி ஆகிய பகுதிகளிலும் வைகோ பேசினார்.