தூத்துக்குடியில் காவல்துறை அராஜகம்..!காயமடைந்தவர்கள் வேதனை குரல் ..!

Default Image

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய நரவேட்டையில் 65 பேர் காயமடைந்துள்ளனர் . அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் . அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர் .

மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்க்க அவர்களது பெற்றோரும் உறவினர்களும் வந்திருந்தனர் . காயமடைந்தவர்கள் காவல்துறையினர் நடத்திய நரவேட்டை குறித்து கூறியது நெஞ்சை உலுக்குவதை அமைந்துள்ளது . காயமடைந்தவர்கள் சிலர் கூறிய தகவல்கள் வாசகர்களின் பார்வைக்கு தருகிறோம் .

 

தூத்துக்குடி மடத்தூர் சேர்ந்த முத்துராஜ் (48) ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினேன் அப்போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் என் கன்னத்தில் குண்டு பாய்ந்து விட்டது என்றார்.

தாளமுத்துநகரை சேர்ந்த நெல்சன்ராய் (30) கூறுகையில் போலீஸ் சுட்டதில் எனது இடது காலில் குண்டு பாய்ந்து வெளியே வந்துவிட்டது. என்னை பின்புறத்தில் இருந்து சுட்டனர். நான் காயமடைந்ததை கூட பெரிதாக நினைக்கவில்லை இவ்வளவு நடந்த பிறகும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் போதும் ‘ என்றார்.

 

ஜஸ்டின்செல்வநிதிஷ் (27) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் .ஓட்டபிடாரம் அருகே உள்ளே கீலமுடிமன் கிராமத்தை சேர்ந்த இவர் கிரேன் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார் .செவ்வாய் அன்று பணிக்கு சென்ற இவர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வீடு திரும்பி உள்ளார். அப்போது காவல்துறையின் தடியடியில் சிக்கி கொண்டார். இவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது .தனது மகனின் நிலை குறித்து அவரது தாயார் கயல்விழி கதறி அழுதார் “எனது மகனுக்கு வாய்,மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது , மருத்துவர்களிடம் ஏதோ ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கிறார் , என்னிடம் என் மகன் பேசவேயில்லை. உயர்தர சிகிச்சை அளித்து எனது மகனை காப்பாற்ற வேண்டுமென்றார்”.

தூத்துக்குடி சிவந்தாகுளம் உலகநாதபெருமாள் (36) காவல்துறையின் தாக்குதலில் இவருக்கு தலையில் கொடுன்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கூறியதாவது ‘எனது நண்பர்கள் எல்லாம் காவல்துறையில் இருக்கிறார்கள் ,காவல்துறையை மதிக்க கூடியவன் நான், இந்த சம்பவத்தில் காவல்துறை அரக்கத்தனமாக நடந்து கொண்டது, நான்கு காவலர்கள் சேர்ந்து என்னை உருட்டுகட்டையால் தாக்கினார்கள். என் கண்முன்னே ஒருவரை குருவி சுடுவது போல் சுட்டனர் ‘ என்றார்.

மடத்தூரை சேர்ந்த கே.சால்ராஜ் (50) இவர் மடத்தூரில் மளிகை கடை வைத்துள்ளார் . பேசமுடியாத நிலையில் உள்ள இவரது நிலை குறித்து அவரது மனைவி கூறியதாவது:-‘ எனது கணவருக்கு தலையில் 15 தையல்களும், கையில் 5 தையல்களும் போடப்பட்டுள்ளன சாதாரண கம்பால் அடித்தால் இந்த அளவிற்கு காயம் ஏற்பட்டிருக்காது , இரும்பு கம்பியால் அடித்துருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு கொடும் காயம் ஏற்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இப்போதாவது மூடுவதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும் ,சில ஊடகங்கள் பேட்டியெடுக்க வந்தன பேட்டியளிக்க மறுத்துவிட்டேன் பத்திரிகை என்பதால் தாங்களுக்கு பெட்டி அளிக்கிறேன்’ என்றார்.

புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள கேவிகேநகரை சேர்ந்த மணி (37) இவரை காவல்துறையினர் தாக்கியதில்  தலையில் கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது அவர் கூறுகையில் “பைப், கம்பி, லத்தி இவற்றில் எதை கொண்டு அடித்தார்கள் என்றே தெரியவில்லை , காவல்துறை அடித்ததில் நான் மயக்கமடையும் நிலைக்கு சென்றுவிட்டேன் “ என்றார்.

காவல்துறையின் கொடூர தாக்குதலுக்கு போராட்டத்திற்கே தொடர்பில்லாத பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள மாணவர் இசக்கிமுத்துஹரிஷ் (15) – ம் தப்பவில்லை இவருக்கு தோள்பட்டை, கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி மில்லர்புரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த இசக்கிசெல்வம் (35) சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் அவரை காவல்துறையினர் தள்ளிவிட்டு சுற்றிவளைத்து கட்டையாலும், கம்பியாலும், தன்னை தாக்கியதாக கூறினார் . இந்த சம்பவத்தில் காவல்துறையினர் என் கண்ணெதிரே சிறு குழந்தைகளையும் தாக்கினர் என்றார்.

அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளர், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னால் அங்கம் வகித்தவருமான சந்தோஷ்ராஜ் (21) கூறுகையில் காவல்துறையினர் மிக மோசமாக நடந்த கொண்டனர் அவர்கள் என்னை தாக்கியதில் தலையில் கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடி கூட்டம்புளியை சேர்ந்த பால் வியாபாரியான சிவகுமார் (23) பால் ஊற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார் காவல்துறையின் தாக்குதலில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது என கண்ணீர் மல்க கூறினார்.

தூத்துக்குடி மீனவர் காலனி , ஜார்ஜ் தெருவை சேர்ந்த சாமராஜ் (45) ஸ்டெர்லைட்டை மூட சொன்னதற்காக என்னை காவல்துறை கடுமையாக தாக்கியதில் , தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடியை சேர்ந்த மரியசிலுவைஎஸ்தோ (34) கூறுகையில் :-  எனது மனைவியை காவல்துறையினர் தாக்கினர் அவர்களை தடுக்க சென்றேன் ,காவல்துறையினர் துப்பாக்கியால் சுடுவதை அறிந்து அருகில் உள்ள பள்ளத்தில் குதித்தேன் காவல்துறையினர் அந்த பள்ளத்தில் கல்லை தூக்கி போட்டனர் இதில் நான் காயமடைந்தேன் என்றார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்