ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாத,தமிழக அரசே பொறுப்பு என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், நாசகார நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டதை எதிர்த்து, மீனவர்கள், விவசாயிகள், பொதுநல அமைப்பினர் உட்பட எங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தொடக்க நாளில் இருந்து இடைவிடாத அறப்போராட்டங்களை நடத்தினோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்து, 1998 செப்டம்பர் 28 ஆம் தேதி ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பு பெற்றபோதும், ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, 2013 பிப்ரவரி 2இல் ஆலையை இயக்கும் தீர்ப்பைப் பெற்றது.
உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமானால், எதிர்காலத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் தொற்றுநோய், சரும நோய் இவற்றால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். விவசாயமும் அடியோடு நாசமாகும் நிலை ஏற்பட்டதால், இன்னும் இரண்டு மடங்கு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் மற்றும் தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வந்தனர்.
வணிகப் பெருமக்கள் இருமுறை கடையடைப்பு செய்தனர்.மராட்டிய மாநிலத்தில் இதே ஆலை தொடங்கப்பட்டபோது, அங்கு விவசாயிகளும், பொதுமக்களும் 1994 இல் ஆலையை உடைத்து நொறுக்கினர். அம்மாநில அரசு லைசென்சை ரத்து செய்தது.
தூத்துக்குடி மாநகர சுற்று வட்டார மக்கள் மனம் கொந்தளித்த நிலையை உணர்ந்துகொள்ளாத தமிழ்நாடு அதிமுக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. கண்துடைப்புக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை நிறுத்தி வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவிக்கத் தமிழக அரசு தவறியது. அதன் விளைவாகவே பொதுமக்கள் பொறுமையின் எல்லையைக் கடந்து போராட வேண்டிய நிலைமை உருவானது.
தமிழக அரசு பல மாவட்டங்களிலிருந்து காவல்துறையைத் திரட்டி ஸ்டெர்லைட்டைப் பாதுகாக்கவும், பொதுமக்கள் போராட்டத்தை அடக்குமுறையால் நசுக்கவும் முற்பட்டதன் விளைவுதான் இன்று மே 22 ஆம் தேதி இதுவரை வந்த தகவலின்படி 12 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பலர் மரண காயம் உற்றிருப்பதாகவும். செய்திகள் வந்துள்ளன.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிற்பகலில் காவல்துறையினர் திடீரென்று பிரவேசித்து நான்கு பேரை சுட்டுக்கொன்றுள்ளனர் என்றும், ஒருவர் தலை வெடித்து மூளை சிதறி உள்ளது என்றும், இதில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார் என்றும் செய்தி வந்துள்ளது
பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பாவார்கள்.
தூத்துக்குடி மாநகரிலும், பக்கத்துக் கிராமங்களிலும் காவல்துறையினர் பல இடங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைக் கடுமையாகத் தாக்குவதும், மிரட்டுவதும் தொடர்கின்றது.
இன்று நடைபெற்ற அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து பங்கேற்றனர். குறிப்பாக ஏராளமான தாய்மார்கள் கைக்குழந்தைகளோடு பங்கேற்றனர்.
ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது.
உயிர்ப்பலி வாங்கிய துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொடிய அடக்குமுறையை நடத்தி வரும் காவல்துறையின் அராஜகம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் இணைந்து தாங்களாகவே விசாரணையை நடத்த முன்வர வேண்டும்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் நிவாரணத் தொகையும், படுகாயமுற்றவர்களுக்கு ஐந்து இலட்ச ரூபாய் நிவாரணத் தொகையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழக அரசு ஏவிய காவல்துறையின் பாசிச அடக்குமுறையை எதிர்த்து நீதி கேட்டு அறப்போராட்டம் இன்னும் வீறுகொண்டு எழும் என்பதையும், மக்கள் உரிமைக் கிளர்ச்சியை நசுக்க முடியாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…