தூத்துக்குடிஅரசு மருத்துவமனையில் டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆய்வு..!
தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களையும், சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி. ராஜேந்திரன், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இருதரப்பிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாகக் கூறினார். தூத்துக்குடியில் முழுமையாக அமைதி திரும்பியதும், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் படிப்படியாக குறைக்கப்படுவார்கள் எனக் கூறிய டி.ஜி.பி.ராஜேந்திரன், ஒருநபர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி. தூத்துக்குடி மாவட்டத்தில் துண்டிக்கப்பட்ட இணையசேவை நள்ளிரவு முதல் வழங்கப்படும் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீரடைந்து வருவதாகவும், இதனால் வெளிமாவட்ட காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவருவதாகவும் கூறினார். இயல்பு நிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்