தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தோழமைக் கட்சிகளுடன் திமுக இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதை ஒட்டி, சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைதி தீர்வு காண முயற்சிக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது என்று சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுகின்றன. 4 கூடுதல் காவல் ஆணையர்கள் தலைமையில், அசம்பாவிதங்களை தவிர்க்க சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்