துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் !
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தூத்துக்குடியில் கலவரத்தின் போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21ந் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
தற்போது பதட்டம் குறைந்ததன் காரணமாக, நேற்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி சென்றார். அங்கு துப்பாக்கி சூடு, தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.