துப்பாக்கிச்சூடு:ஆண்டணி செல்வராஜின் மரணம் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது’ என காவல்துறையினர் கூறுவது உண்மை தானா? எனும் சந்தேகத்தை ஆண்டணி செல்வராஜின் மரணம் எழுப்புகிறது.
கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனி செல்வராஜ். இவருக்கு வயது 46. கடந்த 22ம் தேதி மதியம் 1 மணியளவில் தனது மகளின் நீராட்டு விழாவுக்கு தனது அலுவலகத்தில் பத்திரிகை கொடுத்து விட்டு அலுவலகத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.
அதன்பின் பாளையங்கோட்டை சாலையில் இருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு வந்துள்ளார். தனது மனைவிக்கு ஃபோன் மூலம் அழைத்து, தான் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துவிட்டு வாகனத்தை எடுக்க வந்துள்ளார். இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் வேகமாக அவர் அருகில் வந்ததாகவும் அதில் வந்த காவல்துறையினர் ஆண்டனி செல்வராஜை சுட்டதாகவும் ஆண்டனி செல்வராஜை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டனி செல்வராஜ் போராட்டத்துக்கு செல்ல நினைக்கவேயில்லை என்றும் அவர் நின்று கொண்டிருந்த இடத்தில் எந்தவித போராட்டமும் நடைபெறவில்லை என்றும் ஆண்டனி செல்வராஜ் பணிபுரிந்த தனியார் நிறுவன தலைவர் ஹார்ட்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், மதியம் ஒரு மணிக்கு தனது தந்தையை பார்த்து தன் மகளின் நீராட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதன் பின் தான் அருகில் இருக்கும் வங்கிக்கு வந்துள்ளார். நின்று கொண்டிருந்த அவரை இரு சக்கர வாகனத்தில் வந்து காவல்துறையினரை சுட்டுவிட்டனர் என கூறுகிறார்.
22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது தொடர்பாக மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை சாலையில் உள்ள எப்சிஐ குடோனுக்கு எதிரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக ஓட்டபிடார காவல்நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் கொடுத்த புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்சிஐ குடோன் எதிரில் உள்ள காவல்துறையினரை கலவரகாரர்கள் தாக்க முற்பட்டதாகவும் குடோனில் நுழைந்து பொதுச் சொத்தை சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உட்கோட்ட நடுவரை தேடியதாகவும் அவர் இல்லாததால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு, ரப்பர் குண்டுகள் பயன்படுத்துவது போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் ஆனால் அப்போதும் அந்த கூட்டம் கலையாததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கூறப்படும் இந்த இடத்துக்கும் ஆண்டனி செல்வராஜ் சுடப்பட்ட இடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. எனவே ஆண்டனி செல்வராஜ் மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
எப்சிஐ குடோன் எதிரில் துப்பாக்கிச் சூடு நடைபெறும் முன் அங்கிருந்த சூழலும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முன் காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அது போன்ற சூழல் எதுவும் இல்லாத இடத்தில் ஆண்டனி செல்வராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்ட போது இந்த விவகாரம் சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் இது குறித்து எந்த தகவலும் தற்போது தெரிவிக்க முடியாது என கூறினார். இது குறித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்ட போது, இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் தான் பொறுப்பேற்பதற்கு முன்பாக நடைபெற்றவை குறித்து கூற முடியாது என்றும் தெரிவித்தார்.