தீவிரமடையும் பருவமழை! குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை நீடிப்பு..!
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது.
கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அருவி அமைந்துள்ள வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் கடந்த 3 நாட்களாக அருவியில் வெள்ளம்பெருக் கெடுத்து பாய்கிறது.
இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறை தடை விதித்தது. நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அருவிக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இன்றும் அங்கு மழை பெய்து வருவதால் அருவிக்கு செல்ல தடையை வனத்துறை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர்.
கனமழை காரணமாக சிறுவாணி செல்லும் சாலையில் பாறை உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து வன ஊழியர்கள் பாறையை அகற்றினர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சாடிவயல் சோதனை சாவடியில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி அருகே சின்னாறு ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்த்து விட்டு செல்கிறார்கள்.
இதேபோல பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.