தீர்ப்பு , ஊசிவெடியாக வெடித்து உள்ளது : தமிழிசை..!
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது. தீர்ப்பு தொடர்பாக பா.ஜனதா தலைவர் தமிழிசை கருத்து தெரிவிக்கையில், தீர்ப்பு தீர்வில்லாமல் வந்து உள்ளது. அதுமட்டுமில்லாது யாருக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் இல்லாமல் வந்துள்ளது.
தீர்ப்பு தமிழக அரசியலில் அணுகுண்டா? அல்லது புஷ்வாணமா? என்பது பின்னர் தெரியவரும் என்று கூறியிருந்தேன். இப்போது அணு குண்டாகவும் இல்லாமல், புஷ்வாணமாகவும் இல்லாமல் ஊசிவெடியாக வெடித்து உள்ளது. வழக்கு முடிவு மூன்றாவது நீதிபதிக்கு சென்று உள்ளது, எனவே முடிவை பொறுத்து இருந்து பார்ப்போம். ஒரு நீதிபதி தகுதிநீக்கம் செல்லும் என்றும், ஒரு நீதிபதி தகுதிநீக்கம் செல்லாது என்றும் கூறிஉள்ளனர். பொருத்து இருப்போம், கால அவகாசம் உள்ளது. மூன்றாவது நீதிபதி என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம் என்றார்.
நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், நீதிபதிகளின் தீர்ப்புக்கு பதில் கருத்து தெரிவிக்கும் வகையில் நான் சூப்பர் நீதிபதி கிடையாது. அவர்களுடைய தீர்ப்பிற்கு அவர்களிடம் காரணம் இருக்கலாம், இரண்டு தீர்ப்பு தொடர்பாக என்னால் கருத்து தெரிவிக்க முடியாது, என குறிப்பிட்டார்.