தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி..!
தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர்,
குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்?.
தி.மு.க.வில் இருந்தபோது குஷ்பு ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் தெரியும். முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க.விலிருந்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார். தி.மு.க.வினர் யாருமே குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை – தாக்கவுமில்லை. இந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.