தி.மு.க.தான் காவிரி பிரச்சனையின் கதாநாயகனே …!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி பிரச்சனையின் கதாநாயகனே தி.மு.க.தான் என்றும், அ.தி.மு.க அரசு கொடுத்த அழுத்தம் மக்களுக்கு தெரியும் என உண்ணாவிரத மேடையில் பேசினார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
“காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை. இதற்காக அ.தி.மு.க. அரசு கொடுத்த அழுத்தம் மக்களுக்கு தெரியும். காவிரி பிரச்சனையின் கதாநாயகனே தி.மு.க.தான். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது கிடைத்த வாய்ப்பை எல்லாம் தவற விட்டு அநீதி இழைத்துள்ளது.
கூட்டணியை விட்டு விலகுவோம் என தி.மு.க கூறியிருந்தால், அப்போதைய காங்கிரஸ் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.