திருப்பூர் பனியன் நிறுவனர் வீட்டிற்குள் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வருவது போல 5 பேர் கொண்ட கும்பல், 12 லட்சம் ரூபாய் கொள்ளை !
திருப்பூர் பனியன் நிறுவன அதிபர் வீட்டிற்குள் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வருவது போல புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரை அடுத்த பூலுவபட்டி பழனிசாமி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது உறவினர் சரவணன் என்பவருடன் உடன் சேர்ந்து கூத்தம்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கார் மற்றும் இடம் வாங்கி விற்பதையும் தொழிலாக செய்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை வழக்கம் போல சிவக்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி சாந்தமணி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.
மதியம் 12:00 மணியளவில் வீட்டு முன்பு கார் ஒன்று வந்து நின்றுள்ளது. நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வருவது போல காரிலிருந்து டிப் டாப் உடை அணிந்த, ஐந்து பேர் வேகமாக இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளனர். சிவக்குமார் இருக்கிறாரா என்று கேட்ட அவர்கள் தங்களை, வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி கொண்டு சாந்தமணியை வீட்டிற்குள் அழைத்துச்சென்று விசாரிப்பது போல நடித்துள்ளனர். வீட்டில் இருந்த செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு, வீட்டில் இருந்த அறைக்குள் சென்று பீரோவில் உள்ள நகை, பணம் ஆகியவற்றை எடுத்து வந்து டேபிள் மீது வைத்துள்ளனர். மற்றொருவர் வீட்டுக்குள் இருக்கும் மூன்று சி.சி.டி.வி., கேமராக்களின் பேக்கேஜ் எங்கே இருக்கிறது என்று கேட்டு மாடிக்கு சென்று அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவின் ஹார்டு டிஸ்க் ஐ கைப்பற்றி உள்ளார்.
அரைமணி நேரம் வரை விசாரிப்பது போல நடித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அந்த 5 பேர் கும்பல் நகை, பணத்தை எடுத்து செல்கிறோம். கோவையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு வந்து, கையெழுத்து போட்டு நகை, பணத்தை பெற்று செல்லுங்கள் என்று கூறிவிட்டு, 30 சவரன் தங்க நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.