திருப்பூர் அருகே பைக் மீது அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் கணவன் – மனைவி இருவரும் பலி!
இருச்சக்கர வாகனத்தின் மீது திருப்பூர் அருகே அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி, அவரது மனைவி மல்லிகா உடன் செங்கப்பள்ளியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இருசக்கரவாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவினாசி சாலையை கடந்தபோது, முன்னால் சென்ற சரக்கு லாரியை போக்குவரத்து அதிகாரிகள் திடீரென நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அதிவேகமாக சென்ற கார் ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த பழனிசாமியின் இருச்சக்கரவாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆறுவழிச்சாலையில் எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.