திருநெல்வேலி முதல் தென்காசி வரை சாலை அமைப்பதற்காக மரங்களை அகற்றும் பணி தொடக்கம்!
இரண்டாயிரம் மரங்களை திருநெல்வேலி முதல் தென்காசி வரையில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிக்காக அகற்றும் பணி தொடங்கியுள்ளது . இதன் காரணமாக பசுமையாகவும் வழிப்போக்கர்கள் இளைப்பாற வசதியாக இருந்த சாலை தற்போது வெறுமையாக காட்சியளிக்கிறது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் நெடுஞ்சாலை தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சாலை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் இருபுறமும் புங்கை மரம், வேப்பமரம், ஆலமரம், புளியமரம் மருதமரம் என பசுமையாக இருக்கும். பயண நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தற்போது
துவங்கியுள்ளது.
உலக வங்கி நிதி மூலமாக சுமார் 412 கோடி செலவில் இந்த பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றது. முதல்கட்டமாக திருநெல்வேலி மாநகரின் பேட்டை பகுதியில் இருந்து தென்காசி எல்லை வரை சுமார் 45. 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையின் இருபுறமும் இருக்கும் சுமார் இரண்டாயிரம் மரங்களை அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது. இதனால் பசுமையாக இருந்த
சாலை வெறுமையாக காட்சி அளிக்கிறது.
நான்கு வழிச்சாலை அமைக்க சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மரங்களை அழிக்கும் நெடுச்சாலைத்துறை, நீதிமன்ற உத்தரவுபடி அழிக்கும் மரங்களுக்கு ஈடாக எத்தனை மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளனர் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். உடனடியாக மரக் கன்றுகளை நட்டால் மட்டுமே, எதிர்கால சந்ததியினருக்கு பலனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.
இந்த சாலை அமைக்கும் திட்டத்திற்காக இரண்டாயிரம் மரங்கள் அழிக்கப்படுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக சுமார் மூவாயிரம் மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சாலை அமைக்கும் பணி எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதைவிட மரங்களை வளர்க்கும் திட்டத்திற்கு அரசு முன்னுரிமை கொடுத்து மீண்டும் பசுமையான சாலையாக மாற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.