திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி.
இவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்துக்கு சென்றார்.
நீட் தேர்வால் மாரடைப் பால் பலியான கிருஷ்ணசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவி, மகன் கஸ்தூரி மகாலிங்கம், மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை- சேலம் வழி பசுமை சாலை திட்டத்தை வேண்டுமென்றே பல இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. இவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள். இவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னை- சேலம் சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
தி.முக. ஆட்சி காலத்தில் இதுபோல் புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. இதனால் இந்த திட்டத்தை எதிர்க்கும் தி.மு.க.வினர் தமிழகத்தின் வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் உள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் 142 அடியை மோடி அரசு உறுதி செய்திருக்கிறது. காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ஆணையம் செயல்பட கர்நாடகா தனது பிரதி நிதிகளை அனுப்பாமல் உள்ளது. இதனால் தான் ஆணையம் செயல்பாடு முழுமை பெறாமல் உள்ளது. தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கூட்டணி கட்சியினருடன் பேசி கர்நாடகாவில் இருந்து பிரதிநிதியை அனுப்ப சொல்ல வேண்டும். ஆணையம் அமைந்தால் தான் காவிரி நீரை பெறமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.