திருச்சி வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் தங்கம் பறிமுதல்..!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் அவ்வப்போது தங்கம் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து கடத்தலை முறியடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ரகுமான் என்ற பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்ததில் அந்த வாலிபர் தனது உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்து ரூ.4.63 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த ரகுமானிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் குருவியாக இருந்து தங்கம் கடத்தி வந்தாரா? யாருக்கு கடத்தினார் என்பது விசாரணை முடிவில் தெரியவரும்.