திம்பம் மலைப்பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்ல தடை…!!
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த பாதையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வதால், பழுது ஏற்பட்டு லாரிகள் நிற்பதும், விபத்துக்குள்ளாவதும் நிகழ்ந்து வருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில், இரும்பு கம்பங்களால் ஆன வளைவுகள் நடப்பட்டு அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என வாகன ஓட்டிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.