சேலம் பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களின் மீது அதிமுக அரசு நிகழ்த்தும் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் வரும் ஜீன் 23ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராடும் மக்களிடம் முழுமையான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையையும் அதிமுக அரசு காதுகொடுத்து கேட்கவில்லை.
மேலும் ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தும் முதலமைச்சர் தன் சொந்த மாவட்ட மக்கள் மீது ஏவிவிட்டுள்ள காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவில்லை. குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை பிரயோகித்து ஜனநாயக பூர்வமான அறவழி போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது இந்த அதிமுக அரசு. போராடிய மாணவி வளர்மதியையும், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து, ஒட்டுமொத்த மக்களையும் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
இதையடுத்து சேலம் பசுமை சாலை திட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவும், அதுவரை விளைநிலங்கள் வழியாக நடத்தப்படும் சர்வேயை நிறுத்தி வைக்கவும், போராடும் மக்கள் மீதான அதிமுக அரசின் காவல்துறை அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் ஜூன் 23-ம் தேதி அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.