திமுக தலைவர் ஸ்டாலின் தான்….!அழகிரியை கட்சியில் இணைத்தால் தான் நாங்களும் பணிபுரிவோம் …! அழகிரிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக முன்னாள் மேயர்
மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானவுடன் திடீரென மு.க.அழகிரி ஆதரவாளர் பி.எம்.மன்னன் கட்சியில் அழகிரியை சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி(அதாவது நேற்று முன்தினம் ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயம் செல்வதற்கு முன் தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் கட்சியில் தன்னை சேர்க்க வலியுறுத்தி முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.அதேபோல் நேற்று அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது என்னை கட்சியில் இணைப்பதற்கு சிலர் தடுத்து வந்தனர்.தற்போது கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் . திமுக தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப 5-ம் தேதி பேரணி என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென மு.க.அழகிரி ஆதரவாளர் பி.எம்.மன்னன் கட்சியில் அழகிரியை சேர்ப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் தான். அழகிரியை கட்சியில் இணைத்தால் இணைந்து பணியாற்றத் தயார்” என்று திடீரென பல்டி அடித்துள்ளார் அழகிரியின் ஆதரவாளர் பி.எம்.மன்னன்.இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் ஆவார்.
இதனால் என்ன மாற்றம் நிகழும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
DINASUVADU