தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,பாஜகவை விமர்சிப்பது ஒன்றையே கொள்கையாகக் கொண்டு அதிகாரத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் ஸ்டாலின் அணை பாதுகாப்பு சட்டத்தின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு விமர்சனங்களை முன் வைப்பது நலம் என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”அணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். நாடு முழுவதும் உள்ள 5300க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்புக் குறைகளை கொண்டதாக உள்ளது. இந்த மசோதாவானது, அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும். இதன் மூலம் அணைகள் முறையாக, தொழில்நுட்ப ரீதியாக கண்காணிக்கப்பட்டு பருவநிலை மாற்றம், கட்டமைப்பு போன்றவற்றை சீரான முறையில் அதிக அளவிலான வல்லுநர்களைக் கொண்டு முறைப்படுத்தி மாநில அரசுகளுக்கு உதவ தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவை நியமிக்கும்.