திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்றும் போராட்டம்…!
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்றும் போராட்டம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, போராட்டத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், கைது செய்தாலும், அடுத்தடுத்த நாட்களில் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் இன்றும் சுமார் 30 இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.