தினகரன் கட்சி தொடங்கியது எங்களுக்கு பிடிக்கவில்லை!இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன்!திவாகரன் அதிரடி

Default Image

இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

திவாகரனின் மகன் ஜெயானந்த் நேற்று முன்தினம் தினகரனுக்கு எதிரான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் “மாபெரும் தவறுகளை பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெயானந்த் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “என்னால் முடிந்ததை போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்யப்போகிறேன். அரசியலில் செயல்படப்போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப் போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்து விட்டால்தான் உண்டு” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே ஜெயானந்த் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “நான்அ.ம.மு.க. என்று எங்கும் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என்று ஏன் ஒருசில நிர்வாகிகள் நினைக்கிறார்கள். எப்போது பிரச்சினை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதை கண்டறியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதில், “எங்களை குழப்பி சுய லாபம் அடைய வேண்டாம். சிறையில் இருந்து சசிகலாவை மீட்கப் போவதாக திவாகரன் சொல்வது பொய்” என்று கூறி இருந்தார்.

இந்த மோதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-நாம் எத்தனையோ சோதனைகளை கழக உடன் பிறப்புக்களின் துணை கொண்டு வென்று வந்துள்ளோம். நம் மீது புனையப்பட்ட பொய் பிரசாரங்களை முறியடித்து தமிழக மக்களின் பேரன்பை பெற்ற இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாம் நிலைநாட்டியுள்ளோம்.

கழகத்தின் வீறு கொண்ட முன்னேற்றத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைத்து வழிகளிலும் நமது விரோதிகள் முயன்று வருகின்றனர். குறிப்பாக சமூக வலைய ஊடகங்களின் வாயிலாக நமது லட்சியப்பயணத்தின் பாதையை திசை திருப்ப முயலும் கழக விரோத சிந்தனை கொண்டோரின் திட்டத்துக்கு ஒருபோதும் நாம் இடமளித்தல் கூடாது.

சமூக ஊடகங்களில் கழகத்திற்கு விரோதமாக வெளியிடப்படும் பல சித்தரிக்கப்பட்ட பதிவுகளை பார்த்தவுடனேயே கருத்து தெரிவிப்பதை தவிர்த்து அந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

பிரிவினையை ஒரு போதும் நாம் நமது மத்தியில் அனுமதித்திடக் கூடாது. நமது சிந்தனையும், நமது கவனத்தையும், ஒருங்கிணைத்து செல்ல வேண்டிய தருணம் இது. இதனை திசை திருப்பும் எந்த ஒரு செயலும் கட்சி விரோதப் போக்கு என்பதை கருத்தில் கொண்டு எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் ஆட்படாமல் அவற்றை வென்று காட்டுவோம் என்று தெரிவித்தார்.

இதேபோல்  தஞ்சையில் தினகரன் , நான் யாருக்கும், எதற்கும் அஞ்சமாட்டேன் சமூக வலைத்தளங்களில் அமமுகவை பற்றி தவறான பதிவுகளை போட்டால் கடும் நடவடிக்கை என்று ஆர் கே நகர் சட்ட மன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் என்னை ஏமாற்ற நினைத்தால் உறவினராக இருந்தாலும் வெளியேற்றுவேன் என்று தஞ்சையில் தினகரன் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நிலையில் திவாகரன்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தினகரன் கட்சி தொடங்கியதை நாங்கள் ஏற்கவில்லை. திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது .இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன்.முதலமைச்சர் பழனிசாமியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தினகரன் துவங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நாங்கள் இல்லை,அதிமுக அம்மா அணியில் தான் இருக்கிறோம்.தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கியுள்ளார்.கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்று மன்னார்குடியில் திவாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்