தினகரன் அணியில் உள்ளவர்களை அதிமுகவிற்கு நேரடியாக அழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் …!
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
நேற்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
நேற்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க தற்போது முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் அணிக்கு சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்.தவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்பி வரவேண்டும்.கருத்து வேறுபாடுகளையும் மனமாச்சரியங்களையும் புறம்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டும். நீர் அடித்து நீர் விலகுவது இல்லை என்ற பழமொழியை அறிக்கையில் கூறியுள்ளனர்.