திண்டுக்கல்லில் பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த போது அதில் சிக்கி இருந்தவர்களுக்கு உதவச் சென்ற கேரள வியாபாரி, அதே இடத்தில் மற்றொரு பேருந்து விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்துகளில் வியாபாரி உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இன்று அதிகாலை கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து சேதமடைந்தது.
இதில் உள்ளே உறக்கத்தில் இருந்த பயணிகள் பலர் படுகாயமுற்றனர். இருவர் உறக்கத்திலேயே பரிதாபமாக உயிரை விட்டனர். பலர் ரத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக யானை பொம்மைகளை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றுக் கொண்டு கேரளா சென்று கொண்டிருந்த வியாபாரி சாஜி என்பவர் வாகனத்தை நிறுத்தி விட்டு பயணிகளை காப்பாற்றச் சென்றார். அப்போது அதே நேரத்தில் அதே இடத்தில், பெங்களூரு சென்ற மற்றுமொரு தனியார் பேருந்து சாலை ஓரம் இறங்கி தறி கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து மோதியதில் உதவி செய்யச் சென்ற சாஜி என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமுற்ற 15 பேரை வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். தம்மனம்பட்டியில் நேற்று மழை பெய்த காரணத்தால் சாலை வழுக்கியதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.