திண்டிவனம்-திருச்சி நெடுஞ்சாலைத் திட்டம் புறக்கணிப்பு?ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்,சேலம் சென்னைக்கு ஏற்கனவே சிறப்பான சாலை இருக்க திருச்சி திண்டிவனம் சாலை பத்தாண்டுகளாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என எட்டுவழிச்சாலை திட்டத்தின் பின்னனி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:
சம உரிமை பெற்ற இருவரில் ஒருவருக்கு சாதகமாகவும், ஒருவருக்கு பாதகமாகவும் யாராவது நடந்து கொண்டால், அந்த நிகழ்வை ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்று வர்ணிப்பது வழக்கம்.
ஆனால், சென்னையிலிருந்து சேலத்திற்கு 8 வழி பசுமைவழிச் சாலை அமைக்கும் விஷயத்தில் சம உரிமை பெற்ற ஒருவரின் கண்களிலும் சுண்ணாம்பு வைத்து விட்டு, எந்த உரிமையும் இல்லாத, தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத பெரு நிறுவனத்தை நெற்றிக் கண்ணாக நினைத்து அதற்கு வெண்ணெய் பூசி வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசும், மாநில அரசும்.
மக்களின் தேவைகள் என்ன? என்பதை அறிந்து அதை நிறைவேற்ற பாடுபடுவது தான் மக்கள் நல அரசின் பணி ஆகும். ஆனால், சென்னை-சேலம் சாலை விஷயத்தில் என்ன நடக்கிறது? சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாக சென்னையிலிருந்து சேலத்திற்கும், சேலத்திலிருந்து சென்னைக்கும் நெரிசல் இன்றி சென்று வர முடியும்.
இத்தகைய சூழலில் சென்னைக்கு இன்னொரு சாலை வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை. ஆனால், கேட்காத மக்களுக்கு, தேவையே இல்லாத ஒரு சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திணிக்கின்றன. இந்த சாலையால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக பாதிப்புகள் தான் மிகவும் அதிகமாகும்.
இந்தத் திட்டத்திற்காக புறம்போக்கு நிலங்கள் தவிர 1500 ஹெக்டேர் நிலங்கள், அதாவது 4500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அந்தப்பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் சிறு, குறு விவசாயிகள் என்பதால் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதையும் இழந்து வாழ்வாதாரமற்றவர்களாக மாறுவார்கள்.
மொத்தம் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வனப்பகுதிகள் சீரழிக்கப்படும். இதனால் மக்களுக்கும், வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை யாராலும், எக்காலத்திலும் ஈடுசெய்ய முடியாது. இது ஒரு கண்ணின் நிலை.
இன்னொரு கண் சென்னையிலிருந்து திருச்சி வழியாக திண்டுக்கல், அதன்பின் திண்டுக்கல் முதல் தென் மாவட்டங்கள் வரை செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் 45ஏ ஆகியவை. நான்கு வழித்தடங்களைக் கொண்ட இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் திண்டிவனம் முதல் திருச்சி வரையிலான 203 கி.மீ நீள சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2005-ஆம் ஆண்டில் விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அத்திட்டத்திற்கு அண்மையில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படவிருந்தன. ஆனால், திடீரென அத்திட்டம் கைவிடப்பட்டு விட்டது. திண்டிவனம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தை கைவிடுவது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் மிகவும் நெரிசலான சாலை 45 ஆவது தேசிய நெடுஞ்சாலை தான்.
இந்த சாலை வழியாக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நெரிசல் காரணமாக இந்த சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து போகும் அவலநிலை காணப்படுகிறது. சில நேரங்களில் சென்னையிலிருந்து திருச்சி செல்ல 10 மணி நேரத்திற்கும் மேலாகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் சென்னை முதல் திருச்சி வரையிலான சாலையை விரிவாக்க திட்டமிடப்பட்டது. அதில் தாம்பரம் – திண்டிவனம் இடையிலான விரிவாக்கப்பணிகள் சில காரணங்களால் தடைபட்டுள்ள நிலையில், திண்டிவனம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளையும் மத்திய அரசு கைவிட்டிருப்பது எவ்வகையில் நியாயம்? இது தான் இரண்டாவது கண்ணின் நிலை.
அதுசரி திண்டிவனம் முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் எதற்காக கைவிடப்பட்டது தெரியுமா? மூன்றாவது கண்ணின் நலனுக்காகத் தான் கைவிடப்பட்டது. என்ன புரியவில்லையா?
தேவையே இல்லாத சேலம் -சென்னை சாலையை அமைக்க ரூ.10,000 கோடி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான நிதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இல்லை. உடனடியாக திண்டிவனம்-திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை சென்னை – சேலம் பசுமை சாலைத் திட்டத்திற்காக ஒதுக்கி விட்டார்கள்.
ஆக…. திண்டிவனம்- திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கம் தேவைப்படும் மக்களுக்கு அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சென்னை-சேலம் இடையிலான 5 மாவட்ட மக்களுக்கு புதிய சாலை தேவைப்படாத நிலையில், அங்கு புதிய சாலையை திணித்ததுடன், அதற்காக அங்குள்ள மக்களின் விளைநிலங்களை பறிக்கப்போகிறது.
இந்தத் திட்டத்தால் இரு தரப்பு பொதுமக்களும் எந்த நன்மையும் இல்லை. பாதிப்புகள் தான் மிகவும் அதிகம் ஆகும். ஆனாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் துடிப்பது ஏன்?
இந்த வினாவுக்கான விடை மிகவும் எளிதானது. புதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தான் மூன்றாவது கண் ஆகும். அந்த கண்ணுக்கு வெண்ணை வைப்பதற்காகத் தான் சென்ன-சேலம் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நிலங்களை பறிக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
அந்த கண்ணுக்கு வெண்ணெய் வைப்பதற்காகத் தான் திண்டிவனம்-திருச்சி சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மடைமாற்றி அனுப்பப்பட்டது.
மூன்றாவது கண்ணுக்கு வெண்ணெய் வைப்பதற்காக பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு நீதி கிடைப்பதற்காக எவ்வாறு போராடப்போகிறார்கள்? என்ற வினாவுக்கு கிடைக்கும் சரியான பதில்கள் தான் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வழிகாட்டிகளாக அமையப்போகின்றன.”
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.