திண்டிவனம் அருகே காரில் கடத்தப்பட்ட 735 லிட்டர் எரிசாராயம் சிக்கியது..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.