திடீரென்று சீமான் பக்கம் சாய்ந்த அன்புமணி …! சீமானைப் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது…!

Default Image

 பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி  சீமானுடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் அவர் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக, அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் சீமான் விடுவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் அப்போது நடந்த சில நிகழ்வுகள் தொடர்பாக சீமான் மீது 10 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இப்போது சீமானை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அதன் பின்னர் அவர் மீது இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் இரு வழக்குகளிலும் கைது செய்து சிறையில் வைத்திருப்பது தான் அதிமுக அரசின் திட்டமாகும். இது சீமானை பழிவாங்கும் நோக்கத்துடனும், காவிரிப் போராட்டங்களை முடக்கும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும்.

ஐ.பி.எல் போட்டிகளின் போது விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது உண்மை. அதை ஒரு தரப்பின் வினைக்கான எதிர்வினை தானே தவிர, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை அல்ல. அதற்காக சீமானை கைது செய்வது எவ்வகையிலும் சரியல்ல.

சீமானை கைது செய்யக்கூடாது என்று பல்லாவரத்தில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதும் கண்டிக்கத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சாதிக்கத் தவறிய தமிழக அரசு, மேலாண்மை வாரியத்திற்காக போராடியவர்களை கைது செய்வது ஏற்கத்தக்கதல்ல.

எனவே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பிரதமருக்கு எதிரான போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அவரையும், மற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்