தவறான பாதையில் கல்லூரி மாணவர்கள் பயணித்தால், எதிர்காலமே கேள்விக்குறியாகும்! சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு எச்சரிக்கை!
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு, கல்லூரி மாணவர்கள் தவறான பாதையில் பயணித்தால், எதிர்காலமே கேள்விக்குறியாகும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கல்லூரி செல்லும் மாணவர்கள் மீது பெற்றோரும் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னையில், முதல் நாளே பட்டாக்கத்தி மற்றும் பட்டாசுகளுடன் கல்லூரிகளுக்கு சில மாணவர்கள் வந்திருந்தனர்.
கல்லூரி வளாகம், பேருந்து நிறுத்தம், கல்லூரி வரும் சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பட்டாக்கத்தியுடன் வந்த மாணவர்களையும், மாநகரப் பேருந்தை சிறைப்பிடித்து, ரகளையில் ஈடுபட்டவர்களையும் பிடித்தனர். பட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த 6 பேர் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்ற மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு, மாணவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முன்னாள் மாணவர்கள் சிலரின் தவறான வழிகாட்டுதலே காரணம் என தெரிவித்தார்.
கல்லூரி திறக்கப்படுவதற்கு முன்பே, ரூட்டு தல எனப்படும் மாணவர்களை அழைத்து, எச்சரிக்கை விடுத்ததாகவும், இதனாலேயே, கடந்த ஆண்டைவிட, தற்போது பிரச்சனைகள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் தவறான பாதைக்கு செல்வதைத் தவிர்க்க, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் விசயத்தில் பெற்றோரும் கண்காணிப்பு செலுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்திய இணை ஆணையர், யாருடைய கல்லூரி பெரியது என்பதை திறமைகள் மூலமே மாணவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.