தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் குறித்து புதிய அறிவிப்பு..!

Default Image

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (டி.என்.பி.எல்.) 3-வது சீசன் அடுத்த (ஜூலை) மாதம் 11-ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’ மற்றும் ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், தூத்துக்குடி ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 32 போட்டிகள் நடக்கிறது. தொடர்ந்து 33 நாட்கள் நடைபெறும் போட்டித்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி சென்னையில் நடக்கும் இறுதி போட்டியுடன் நிறைவடைகிறது.

இந்த போட்டிகள் நெல்லை மாவட்டம் சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என். பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம். ஏ.சிதம்பரம் மைதானம் என 3 இடங்களில் நடத்தப்படுகிறது. நெல்லை, நத்தம் ஆகிய 2 மைதானங்களில் தலா 14 போட்டிகளும், சென்னையில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக ஐ.பி.எல். மற்றும் டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் சதீஷ், ஜெகதீசன் ஆகியோர் நேற்று இரவு திருச்சியில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் 3-வது சீசன் வருகிற ஜூலை 11-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அளவில், கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தவர்களுக்கு, கடந்த 2 ஆண்டுகளாக டி..என்.பி.எல். கிரிக்கெட் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இது கிராமப்புற இளைஞர்களை கிரிக்கெட் விளையாடுவதில் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிராமங்களில் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் இன்று கிரிக்கெட்டை தொழில் நுட்பத்துடன் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

இது, கிரிக்கெட் குறித்து அறிவை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. டி.என்.பி.எல். கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது. அதேபோன்று 3-வது சீசனிலும் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ளனர். நாங்களும் அதேபோலத்தான் இடம் பெற்றோம். இளைஞர்கள் கிரிக்கெட்டில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள டி.என்.பி.எல். அடிப்படையாக இருக்கிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஆட தகுதியானவர்கள் தற்போது அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வீரர்கள் சதீஷ், ஜெகதீசன் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டில் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் டி.என்.பி.எல். முதன்மை அதிகாரி பிரசன்னா கண்ணன், செய்தி தொடர்பாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி.முரளிதரன், செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்