தமிழை தாழ்த்துவதா….???கொந்தளித்த மாணவர்கள்…!!

Default Image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.அப்போது போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு பதற்றம் நிலவியது.

சுந்தரனார் பல்கலைக்கழகத்தை 3 மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்களும் இந்திய மாணவர் சங்கத்தினரும் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களை வழக்கம்போலவே ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு யூ.ஜி.சி அமைப்பைக் கலைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

கடந்த 10 வருடங்களாக மாணவர்களின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்படாத நிலையில், அதனை உடனடியாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையில் நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சத்யா, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாணவி சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளரான மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் கோஷங்களை முழங்கியபடியே பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறையினர் வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஆனால், மாணவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காததால் வாசலிலேயே அவர்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், மாணவர் சங்க நிர்வாகிகளை மட்டும் பல்கலைக்கழகத்துக்குள் சென்று துணைவேந்தர் பாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதித்தனர். மாணவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலுவாகவும் ஆதாரத்துடனும் துணைவேந்தரிடம் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து, பேராசிரியர்கள். செனட் உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக துணைவேந்தர் பாஸ்கர் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து 3 மாவட்ட மாணவர்களும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் கலைந்து சென்றார்கள்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்