தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி டி கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
நாடு முழுவதும் மே 6-ல் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கபட்டிருந்தன. இந்த 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.