திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,குட்கா முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரிகளை மாற்றியும், கோப்புகளை மறைத்தும், அந்த வழக்கிற்கு மூடு விழா நடத்த, ஆளும் அதிமுக அரசு முயற்சிப்பதாக, குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், குட்கா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி மஞ்சுநாதாவை, ஓராண்டு காலத்திற்குள்ளாக மாறுதல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கிறார்.
சுதந்திரமான விசாரணைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை அடுத்து, விஜிலென்ஸ் ஆணையராக இருந்த ஜெயக்கொடி, கடந்த ஜனவரி மாதம் மாற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.