தமிழக அரசின் கைது நடவடிக்கையை கண்டு அஞ்சாமல் அடுத்த கார்ட்டூனை வெளியீட்ட பாலா…!
தமிழக அரசின் கைது நடவடிக்கையால் தான் சிறிதும் மனம் தளர வில்லை என்றும் அனைத்து மக்கள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவோடு எப்போதும்போல் அரசின் தவறுகளை விமரிசித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று சொல்கிற கார்ட்டூனிஸ்ட் பாலா தன்னைப்பற்றியே இந்த கார்ட்டூன் வரைந்துள்ளார்.
23-10-17 என் வாழ்வை புரட்டிப்போடப்போகும் நாள் என்பது அப்போது எனக்கு தெரியாது.. அந்த காட்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தேன் என்றால் இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது. இதை எழுதும் இந்த நொடி கூட அந்த காட்சி என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது..
ஒரு சிறு கங்கு பட்டால் கூட உடல் துடித்துப்போகும் நமக்கு, உடலில் பற்றி எரியும் நெருப்புகளுடன் அந்த குழந்தைகள் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள் என்பதை பார்த்தபோது உங்கள் எல்லோரையும் போல் நானும் மன உளைச்சலுக்குள்ளானேன் ..
அந்த தந்தையின் மீது ஆத்திரமாக வந்தது.
ஆனால் ஆறு முறை கந்துவட்டிக்குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால்தான் இந்த தீக்குளிப்பு என்ற செய்தி உடனடியாக வெளியே வந்தபோது அந்த ஆத்திரம் ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகத்தின் மீது திரும்பியது..
இரவெல்லாம் தூங்க முடியவில்லை.. காரணம் நின்று எரிந்த அந்த குழந்தை என் இளைய மகன் இளஞ்செழியனின் முக அமைப்புடன் இருந்தது.. என் குழந்தையின் உடலில் நெருப்பு பற்றி எரிந்ததைபோல் வலித்தது..
அந்த ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த மனநிலையில் தான் அந்த கார்ட்டூனை வரைந்தேன். அந்த குழந்தையின் மரணத்தின் முன் இந்த ஆட்சி நிர்வாகம் முழுமையாக அம்மணமாக நிற்கிறது என்ற கருத்தைதான் மக்களுக்கு கடத்த விரும்பினேன்.
அப்படிதான் அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஆட்சியர் காவல்துறை அதிகாரி ஆகியோர் அந்த கார்ட்டூனில் இடம் பெற்றார்கள். மற்றபடி அவர்களுடன் எனக்கு எந்த தனிப்பட்ட விரோதம் இல்லை. அந்த கான்செப்ட்டை வேறு எந்த கார்ட்டூனிஸ்ட் வரைந்தாலும் அப்படிதான் வரைவார்கள்.
நான் ஏதோ புதிதாக இப்படி ஒன்றை வரையவில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமரையே மூத்த கார்ட்டூனிஸ்ட்டுகள் பலர் அப்படி வரைந்திருக்கிறார்கள். இது அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிக்க உலகம் முழுக்க இருக்கும் கார்ட்டூனிஸ்ட்டுகள் கையாளும் ஒரு யுக்தி.
அப்படி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வரைந்த அந்த கார்ட்டூனுக்காக தான் மிகச்சரியாக இதேப்போன்ற ஓரு ஞாயிற்றுக்கிழமையில் கதறி அழுதபடி நின்ற என் மனைவி குழந்தைகள் முன் என்னை ஒரு கொடூர கொலைக் குற்றவாளியைப்போல் போலீசார் இழுத்துச்சென்றார்கள்.
திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட தனிப்படை மிகப்பெரும் பயங்கரவாதியான கார்ட்டூனிஸ்ட் பாலாவை தூக்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஸ்கெட்ச் போட்டு சென்னைக்கு வந்துவிட்டது.
நான் பணிபுரிந்த குமுதம் அலுவலகம், முன்பு குடியிருந்த வில்லிவாக்கம் வீடு என்று வரிசையாக என் தடத்தை தேடி பயணித்திருக்கிறார்கள்.
பின்னர் எனக்கு போன் போட்டு, ஒரு ரசிகை.. அவசரமாக ஒரு கார்ட்டூன் தேவை.. நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று வலை விரித்தார்கள். மழை காரணமாக மறுத்தேன். ரொம்ப வற்புறுத்தியதால் போரூரில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு வர சொன்னேன்.
அறிமுகமில்லாத எந்த பெண்களையும் தனியாக சந்திப்பதில்லை என்பதால் அந்த உணவகத்திற்கு என் மனைவி குழந்தைகளுடன் சென்றேன்.
அப்படி குடும்பத்துடன் சென்றதால் தான் அன்றையதினம் என்னை பொது இடத்தில் வைத்து கைது செய்யாமல் விட்டார்களோ என்று தோன்றுகிறது.
மறுநாள் ஞாயிறு மதியம் 1:20 இருக்கும்.
அப்போது யாரோ ஒருவரின் அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை என்ற கோரிக்கை பதிவை ஃபேஸ்புக்கில் எழுதி கொண்டிருந்தேன். அதை பதிவு செய்து அவர்களுக்கு உதவ கூட முடியாதளவுக்கு வீட்டுக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக ஒரு பயங்கரவாதியை இழுத்துச் செல்வதுபோல் இழுத்து சென்றார்கள்.
கூடவே என் போன், என் அப்பாவின் நினைவாக என்னிடம் இருக்கும் அவர் வாங்கி கொடுத்த கம்ப்யூட்டர், யூபிஎஸ், மோடம், செல்போன் பவர் பேங் என கையில் கிடைத்ததையெல்லாம் அள்ளிச்சென்றார்கள்.
“கார்ட்டூன் வரைந்தது நான் தான்… அதை மறைக்கவோ மறுக்கவோ இல்லை.. நானே வர்றேன்.. அப்புறம் எதுக்கு இதையெல்லாம் எடுக்குறீங்க.. ”என்று எவ்வளவோ சொல்லியும் எதையும் காது கொடுத்து கேட்கவில்லை.
எவ்வளவு மன உறுதி கொண்டவர்களானாலும் காவல்துறையினரின் இந்த முதல் அணுகுமுறையை எதிர்கொள்ளவே முடியாது.
ஆனால் நமக்கு அநியாயம் நடக்கும்போது இயற்கை நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
அப்படிதான் காவலர்கள் என்னை பிடித்து இழுத்துக்கொண்டிருந்த சமயத்தில், “அருள் எழிலனுக்கும், சவுக்கு சங்கருக்கும், மகாலிங்கத்துக்கும் தகவல் சொல்லுப்பா..” என்று நான் கத்தினேன்.
என் மனைவி பால்கனிக்கு ஓடிச்சென்று எதிர்வீட்டில் இருந்த பத்திரிகையாளர் அருள் எழிலனை “அண்ணே ஓடி வாங்க..” என்று கத்தி கதறி கூப்பாடு போட்டு அழைத்தார்..
பதறிப்போய் ஓடி வந்த அருள் எழிலனும் அவர் மனைவியும் போலீசாரை தடுக்க முயல அவர்களை தள்ளிவிட்டுவிட்டு என்னை இழுத்துச்சென்றார்கள்.
அதோடு சரி.. அழுதபடி நிற்கும் மனைவி பிள்ளைகள் என் கண்ணிலிருந்து மங்கலாக மறைய வேன் பறந்தது.
பின்னாடியே பக்கத்து வீட்டுக்காரர் பாலாஜி என்பவர் பைக்கில் விரட்டி வந்தார். “ஏடிஎம் கார்டு என்னிடம் தான் இருந்தது. செலவுக்கு பணம் இல்லாமல் என் மனைவி குழந்தைகளுடன் சிரமப்படுவார்..” என்று கெஞ்சியப்பிறகு அதை மட்டும் அந்த நண்பரிடம் கொடுக்க சம்மதித்தார்கள்.
அதோடு சரி.. அதன்பிறகு வெளியே என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஒரு பத்திரிகையாளனாக என்னால் இதை எதிர்கொள்ள முடியும். ஆனால் இரண்டு குழந்தைகளுடன் தனியாக நிற்கும் என் மனைவி எப்படி இதை சமாளிக்கப்போகிறார் என்ற கவலை மட்டும் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.
ஆனால் எல்லாம் வல்ல இந்த பிரபஞ்ச ஆற்றல் எங்களுக்கு துணையாக நின்றது. அருள் எழிலன் ஃபேஸ்புக்கில் என்னை கைது செய்து இழுத்து செல்வதை பதிவு செய்தார்.
அதன்பிறகு நடந்தது எல்லாம் என்னால் இந்த நொடி கூட நம்ப முடியாத அதிசயம்.
“நாங்கள் அநாதைகள் அல்ல..’’ என்று உலகம் முழுக்க இருக்கும் சமூக வலைதள நண்பர்களும்,
நாடு முழுக்க இருக்கும் ஊடகங்களும் எங்களை அரவணைத்துக்கொண்டார்கள்.
சவுக்கு சங்கர் மூலம் செய்தி அறிந்த டைம்ஸ் நவ் இணை ஆசிரியர் நண்பன் சஃபீர் அகமது தனது ஊடகத்தில் பதிவு செய்தப்பின் தான் அது தேசிய செய்தியாக மாறியது.
தகவல் கிடைத்ததும் முதல் ஆளாக வீட்டுக்கு ஓடி வந்த பாரதி தம்பி, மகஇக தோழர்கள் மருதையன், நாதன், பிஎஸ்என்எல் ஆறுமுகம், தமிழ் டைம்ஸ் இளங்கோ என்று நண்பர்கள் பலரும் வீட்டுக்கு வந்து அடுத்து ஆக வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
வேனுக்குள், நான் ஒத்துழைப்பு கொடுத்தால் மரியாதையாக நடத்தப்படுவேன் என்பதையும், தவறான கார்ட்டூன் வரைந்ததற்கு தண்டனையாக சிறையில் ஒரு வாரமாவது இருந்தே ஆக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் உளவியல் ரீதியாக என்னை தயார் படுத்த போலீசார் பேச ஆரம்பித்தார்கள். அவ்வப்போது போனை பார்த்து ரகசியமாக பேசிக்கொண்டார்கள். என்னிடம் எதையும் காட்டவில்லை.
சிறைவாசிகள் நளினியும், பேரறிவாளனும் எழுதிய புத்தகங்களும்.. விசாரணை பட காட்சிகளும் என் மனதில் வந்து போய் கொண்டிருந்தது.
மாங்காடு காவல்நிலையத்தில் வழக்கமான நடைமுறைகளை முடித்துக்கொண்டு நெல்லையை நோக்கி வேன் பறந்தது. அதிகாலையில் நெல்லை எஸ்பி அலுவலகத்தில் வழக்கமான விசாரணை முடிந்தது. அங்கு தான் காவலர்கள் எப்படி கதை எழுதுவார்கள் என்பதை கற்றுக்கொண்டேன். மறக்க முடியாத பல கேரக்டர்களை இந்த அனுபவத்தில் பார்த்தேன். ( இனி வரும் காலங்களில் அவர்கள் எல்லாம் என் கார்ட்டூனில் இடம் பெறுவார்கள்.)
அங்கிருந்து மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அப்போதுதான் சென்னையில் இருந்து நண்பர் ராஜ குள்ளப்பன் காரில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வந்த அருள் எழிலன் போலீசாரிடம் அனுமதி வாங்கி என்னருகே வந்தார்.
“டேய் பாலா.. எல்லா ஊடகங்களிலும் நீ தான் தலைப்பு செய்தி.. இந்த நாடே உன் கூட இருக்கு..
நீ எதுக்கும் பயப்படாத.. ” என்று என் காதில் சொன்னார். அப்போதும் சத்தியமாக நான் நம்பவில்லை. அருள் எழிலன் ஏதோ பில்டப்புக்காக சொல்கிறார் என்றுதான் நினைத்தேன்.
ஏனென்றால் பழகிய தோசத்திற்காக பாரதி தமிழன், அன்பழகன், தமிழ் கனல், விஸ்வா, செந்தில் நாதன் மாதிரி ஒரு நான்கைந்து நண்பர்கள் பிரஸ் கிளப் வாசலில் நின்று கோசம் போட்டுவிட்டு கலைந்துவிடுவார்கள்.. அவ்வளவுதான் நம்ம கதை..” என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
ஆனால் நெல்லை பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி ஊடகங்கள் நீதிமன்ற வாசலில் குவிந்திருந்தைப்பார்த்தபோது தான் வெளியே வேற என்னமோ நடந்திருக்கிறது என்பது புரிய ஆரம்பித்தது. எனக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.
நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டேன். அவர் என்னை புன்னகையுடன் எதிர்கொண்டார். கார்ட்டூன் வரைந்ததற்கான காரணத்தை சொன்னேன். முதலில் எனக்கு வாரண்ட்டை உறுதி செய்தார். பின்னர் செக்சன் படி எனக்கு பெயில் வழங்குவதாகவும் அதுவரை ஓரமாக நிற்கும்படியும் சொன்னார்.
பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழதான் நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென என்னை கைது செய்த இன்ஸ்பெக்டருக்கு போன் வந்தது. வெளியே சென்று பேசிவிட்டு வந்தவர், என்னை தரதரவென வெளியே இழுத்துட்டு போக ஆரம்பித்தார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எனக்கு ஜாமீன் கிடைக்கும் என்பதை காவல்துறையினரும் கைது செய்ய சொன்ன அதிகார மையத்திலிருப்பவர்களும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எப்படியாவது என்னை போலீஸ் வேனில் ஏற்றி, புதிதாக ஒரு எப்.ஐ.ஆர். போட்டு மீண்டும் என்னை கைது செய்து எப்படியாவது சிறையில் அடைத்துவிட வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்திருக்கிறது.
ஆனால் நெல்லை வழக்கறிஞர்கள் எல்லாம் புலிகளாக இருந்தார்கள். அவர்களிடம் ஒரு ஒற்றுமை இருந்ததை பார்த்தேன். என்னை போலீசார் ஒரு பக்கம் இழுக்க மறு பக்கம் வழக்கறிஞர்கள் இழுக்க என்று நீதிமன்ற அறை வாசலில் என்னை மீண்டும் கைது செய்வதற்கான தள்ளுமுள்ளு நடந்தது.
சிறையில் அடைத்தே தீர வேண்டும் என்று ஆட்சியில் இருப்பவர்கள் விரும்புகிறார்கள்.. சரி சிறைக்கே போவோம்.. அவர்கள் சந்தோசப்பட்டுக்கொள்ளட்டும் என்று தான் என் மனதில் அப்போது தோன்றியது. ஆனால் அதற்கு முதல் நாள் தான் வழக்கறிஞர் செம்மணியின் கால்களையும் கைகளையும் போலீசார் உடைத்திருந்தார்கள். ஒரு வழக்கறிஞருக்கே இதுதான் நிலை.. அதான் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று சொன்ன வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன் கொண்டு சென்று என்னை நிறுத்தினார்கள்.
நீதிபதி அவர்கள், காவலர்களை கண்டித்துவிட்டு எனக்கு ஜாமீன் வழங்கினார். அதன்பிறகும் வெளியே வந்தால் கைது செய்ய போலீசார் காத்திருந்தார்கள்.
இனி பயந்து ஓடிக்கிட்டே இருக்க முடியாது என்பதால், தமிழக வரலாற்றில் அவமானகரமான நாளின் நேரடி சாட்சியாக இருக்கும் நெல்லை பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டு, யாருக்கும் சொல்லாமல் நேராக இறந்த குழந்தைகளின் வீட்டுக்கு சென்றோம்.
அது ஒரு சிறு சமையல் அறைதான். அவர்கள் யாரோ எவரோ ஆனால் அந்த குழந்தைகள் என் குழந்தைகளை நினைவு படுத்தினார்கள்.. பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு குழந்தைகளின் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு சென்னைக்கு கிளம்பினோம்.
தனியொரு பெண்ணாக எப்படி சமாளிப்பாரோ என்று நான் கவலைப்பட்ட என் மனைவி, நண்பர்கள் கொடுத்த நம்பிக்கையில் ஊடகங்களில் என் தரப்பு நியாயங்களை பதிவு செய்திருக்கிறார். அவர் சிறப்பாக ஊடகங்களை எதிர்கொண்டதாக அனைத்து நண்பர்களும் சொல்கிறார்கள். ஆச்சர்யமாகதான் இருந்தது. ஒவ்வொரு அரசியல் கூட்டத்திற்கும் நான் குடும்பம் சகிதமாக சென்றதற்கு கிடைத்த பலன்.
கார்ட்டூன்கள் என்பது காலத்தின் கண்ணாடி. அந்த கண்ணாடி முன் ஆட்சியாளர்கள் அம்மணமாக நின்றால் அது அம்மணமாகதான் காட்டும்.
கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சியில் இருந்தபோதே இப்படிதான் கார்ட்டூன் வரைந்திருக்கிறேன். என்னை கைது செய்ய விரும்பியிருந்தால் எத்தனையோ முறை அவர்கள் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் இருந்தது. கடந்து சென்றார்கள்.
ஆனால் டயரை கும்பிட்டு திடீர் அதிர்ஷ்ட்டத்தில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
அதற்கு பதிலடியாக சென்னை பிரஸ் கிளப் நண்பர்கள் தங்கள் கட்டடத்தின் முகப்பில் பேனராக அந்த கார்ட்டூனை கட்டி தொங்க விட்டிருந்தார்கள். இதைவிட ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன அவமானம் இருக்க முடியும்.
இந்த இடத்தில் முக்கியமான விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய கைது என்பது இந்த கார்ட்டூனுக்காக மட்டும்தான் என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.
தொடர்ச்சியாக பாஜகவின் மோடி அரசுக்கும் அவர்களது பினாமி ஆட்சியான எடப்பாடி பழனிசாமி அரசுக்கும்.. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வட இந்திய டவுசருக்கும் எதிராக நான் வரைந்த தொடர்ச்சியான கார்ட்டூன்களும் கட்டுரைகளுமே இந்த கைதின் பின் ஒளிந்திருக்கும் அரசியல். இதில் புகார் கொடுத்த கலெக்டர் மேலிடம் சொன்னதை செய்த ஒரு சிறு அம்புதான்.
(என் வயதையொத்த கலெக்டர் சந்தீப் அவர்களுக்கு என் கார்ட்டூன் மனசங்கடத்தை உண்டுபண்ணியிருந்தால் தனிப்பட்ட முறையில் ஒரு சக மனிதராக அவரிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..)
மெழுகுவர்த்தி ஏந்திய திருமுருகன் காந்தி, நோட்டிஸ் கொடுத்த வளர்மதி என வரிசையாக இப்படி கைது செய்வதற்குப்பின்,
சமூக வலைதளங்களில் இயங்குபவர்களை கைது செய்வதன் மூலம் பொதுவெளியில் ஒரு அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான விமர்சனத்தை தடை செய்வது என்ற மற்றொரு அரசியலும் இதன் பின் இருக்கிறது.
எது எப்படியோ.. மீண்டும் ஒருமுறை அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு மக்கள் சக்தியை நண்பர்கள் எல்லாம் புரிய வைத்திருக்கிறீர்கள்.
நான் கார்ட்டூனிஸ்ட் என்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்று நான் நம்பவில்லை.. என்னை கார்ட்டூன் வரைய வைத்ததும்.. எனக்காக உங்களை குரல் கொடுக்க வைத்ததும் தீயில் கருகிய அந்த குழந்தைகளின் ஆன்மா மட்டுமே.
இந்த விசயத்தில் எனக்கு துணை நின்ற நண்பர்களின் பட்டியல் பெரிது தான் என்றாலும் கூடமுடிந்தவரை பெயர்களை குறிப்பிட்டு நன்றி சொல்லியாக வேண்டும்.. பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
`சுமாரான கார்ட்டூனிஸ்ட்.. சுமாரான எழுத்தாளரான’ எனக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில், என் மீது கருத்தியல் ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் விமர்சனங்களும் கோபங்களும் வருத்தங்களும் இருந்தாலும், இது தான் சந்தர்ப்பம் என்று குதுகலிக்காமல் நான் விடுதலையாக விரும்பிய சக ஊடக நண்பர்கள்,
அருள் எழிலன், பாரதி தம்பி, பா.ஏகலைவன், ராஜகுள்ளப்பன், அழகிரி, நியூஸ் 18 குணசேகரன், புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், சவுக்கு சங்கர், டைம்ஸ் நவ் சபீர், பாரதி தமிழன், அன்பழகன், அசத்துல்லா உள்ளிட்ட பிரஸ் கிளப் நண்பர்கள், வேங்கட பிரகாஷ், மகாலிங்கம், டிஎஸ்எஸ் மணி, நக்கீரன் லெனின், தந்தி டிவி ரங்கராஜ், நியூஸ் 7 நெல்சன், சன் டிவி , ராஜா திருவேங்கடம், சத்தியம், பாலிமர், எப் எக்ஸ் 16 அலெக்ஸ் பாண்டியன் , விஷ்வா, ஜெயா டிவி, வின் டிவி, ராஜ் டிவி, தினமணி ஆசிரியர் வைத்திய நாதன், விகடன் ஆசிரியர் கண்ணன், ஜூவி ஆசிரியர் திருமாவேலன், தமிழ் இந்து ஆசிரியர் அசோகன், தீக்கதிர் ஆசிரியர் குமரேசன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தின் ஆசிரியர் கோசல் ராம், சுகுனா திவாகர், புதியதலைமுறை ராமானுஜம்,
அந்திமழை அசோகன், சத்தியம் டிவி, அரவிந்தாக்ஷன், டைம்ஸ் ஆப் இந்தியா சங்கர், செந்தில் நாதன், தினத்தந்தி, தினமலர், தினமணி, மாலைமலர், தினகரன், தமிழ் முரசு, மாலைமுரசு நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கும், தமிழகத்தில் எனக்கு களம் ஏற்படுத்தி சுதந்திரமாக இயங்க அனுமதித்த குமுதம் நிர்வாகத்திற்கும், ப்ரியா கல்யாணராமன், குபேந்திரன், சன் சரவணகுமார்.மா பாண்டியராஜன், ஞாநி, லக்ஷ்மி சுப்ரமணியம், கவிதா முரளிதரன், கவின் மலர், முரளிதரன், வினவு தோழர்கள், நியூஸ் எக்ஸ் லோக் பிரியா, பேரழகன் பாலா, அ.ப ராசா, என தமிழக ஊடகங்களும்.. ஊடக நண்பர்களும், times now, ndtv, news x, india tv, republic tv, cnn ibn, Indian Express, Mid day, The Times of India, Hindustan Times, The Hindu, The Telegraph, The Deccan Chronicle, Mumbai Mirror, DNA, The Tribune, The New Indian Express,tamil.oneindia உள்ளிட்ட இன்னும் பல ஊடகங்களும், பெயர் அறியாத ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
கார்ட்டூனிஸ்ட்டாக கடுமையாக விமர்சித்தபோதும் அதை மனதில் வைக்காமல் எனக்காக குரல் கொடுத்த கட்சி தலைவர்கள் அன்புமணி, சீமான், பெ.மணியரசன், வேல்முருகன், வைகோ, திருமாவளவன், ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் டிடிவி தினகரன், சுப.உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன், தோழர் பாலபாரதி, பீட்டர் அல்போன்ஸ், திருமுருகன் காந்தி, நடிகர் கமல், ஹசீனா சையத், இயக்குனர் வா கவுதமன், அரஸ் உள்ளிட்ட சக ஓவிய நண்பர்கள், திருநங்கைகள் அப்சரா மற்றும் நண்பர்கள் கிரேஸ் பானு, குட்டி ரேவதி, தமயந்தி, சந்திரா, நீதிபதி சந்துரு, அ.மார்க்ஸ் , எவிடென்ஸ் கதிர், தமுஎகச தோழர்கள், அன்பழகன் வீரப்பன், அயன் கார்த்திகேயன், ராஜரத்தினம் சக்ரவர்த்தி, ஏர்டெல் அருண், ப்ரியா குருநாதன், கிசோர் சாமி, சரவணன் குமரேசன்,
கடங்கநேரியான், ஜீவ கரிகாலன், வா.மணிகண்டன், நா சாத்தப்பன், சரவண சந்திரன், வேடியப்பன், கவிதா பாரதி, கார்த்திக் ரங்கராஜன், அம்ஜத் சந்திரன், அன்பு ராமையன், திருச்செந்தில், ஜெயமுருகன் ஆறுமுக சுந்தரம், Nag Jayaraman, அனந்த கிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஆறுமுகம், தமிழ் டைம்ஸ் இளங்கோ, செந்தமிழன், ஆனந்த் செல்லையா, வெற்றிவேல் சந்திரசேகர், பார்த்த சாரதி, காளிச்சரன் சுந்தரம் என நன்கு அறிந்த மற்றும் முகமறியாத நண்பர்களுக்கும்.. ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட நெல்லை வழக்கறிஞர்களுக்கும், நெல்லை பத்திரிகை நண்பர்கள் அத்தனைபேருக்கும், என் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கும் நன்றி.
மிக முக்கியமாக நாடு முழுவதும் இருக்கும் என் சக கார்ட்டூனிஸ்ட் நண்பர்களுக்கும் இந்தியா ஸ்டாண்ட் வித் கார்ட்டூனிஸ்ட் பாலா என்று ஹேஸ் டேக் உருவாக்கி எனக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்த என்னுடைய மிகப்பெரிய பலமான அன்பிற்குரிய ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நண்பர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.
நீங்கள் இல்லையேல் நான் வெளியே இல்லை.
அப்புறம் என்னை சிறையில் வைத்து பார்க்க விரும்பிய தமிழக முதல்வருக்கும் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த டவுசர் போட்ட அந்த சூத்திரதாரிக்கும், என் கைதை கொண்டாடிய நண்பர்களுக்கும் நன்றி சொல்லவில்லை என்றால் நான் மாபெரும் பாவி ஆவேன்.. ஆகவே அவர்களுக்கு சிறப்பு நன்றி.
நான் கார்ட்டூனிஸ்ட் ஆக முழு காரணமான மெயின் அக்யுஸ்ட் யெஸ் பாலபாரதிக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
என்னை இழுத்து சென்ற தனிப்படையினர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியாளர்கள் மட்டுமே.. ஆகவே அவர்களுக்கும் நன்றி.
பக்கத்து வீட்டில் கொலையே நடந்தாலும் கமுக்கமாக தங்கள் வீட்டுக்குள் இருப்பார்கள் என்று அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர்கள் குறித்து சொல்வார்கள். ஆனால் கைது செய்து இழுத்து சென்ற போது தடுக்க ஓடி வந்ததுமில்லாமல் என் குடும்பத்தினருக்கு குற்ற உணர்ச்சி உருவாக்காமல் துணையாக நின்ற எங்கள் சக குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் நன்றி.
இந்த தருணத்தில் என் எழுத்துகளாலோ கோடுகளாலோ அறிந்தோ அறியாமலோ யாரையும் தனிப்பட்ட வகையில் காயப்படுத்தியிருந்தால் .. அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இது என் வாழ்க்கை பயணத்தில் ஒரு முக்கியமான காலகட்டம். வழக்கு போட்டு கைது செய்து அச்சுறுத்தி என் கோடுகளின் பயணத்தை இந்த அரசுகளால் தடுத்து நிறுத்த முடியாது.
அன்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களே.. இனி உங்களுக்காக நிறைய கார்ட்டூன்கள் வரும்.. காத்திருங்கள்..
நண்பர்களின் பக்கபலத்தால் இப்போது வீட்டுக்கு வந்துவிட்டேனே தவிர இன்னும் என் அம்மாவும், மனைவியும், குழந்தைகள் இளமாறனும் இளஞ்செழியனும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..
“உங்க அப்பாவை போலீஸ் புடிச்சுட்டு போய் ஜெயில்ல அடைச்சுட்டாங்களா.. ’’என்று பள்ளியில் சக மாணவர்கள் கேட்டார்கள் என்று இளமாறன் பரிதாபமாக வந்து சொன்னான்..
அவன் அப்படி சொன்ன நொடியில் தான் மிகவும் குற்ற உணர்ச்சிக்குள்ளானேன்.. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பின் அப்பா தப்பு செய்யவில்லை என்பதை அந்த குழந்தை மனம் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.
இளமாறன் ஸாரிடா..
இப்போது வீட்டில் காலிங் பெல் அடிக்கும்போதெல்லாம் .. “அப்பா கதவை திறக்காதீங்க.. போலீஸ் வந்துரும்..” என்று குழந்தைகள் அச்சத்துடன் சொல்கிறார்கள். அவர்கள் மனதில் ஏற்பட்ட இந்த காயம் எப்போது மாறும் என்று எனக்கு தெரியவில்லை. என் மனைவி எப்போது இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் தெரியவில்லை.
போலீஸ் பிடியிலிருந்து மீண்டு வீடு வந்து சேர்ந்த அன்று உள்ளறையில் தூங்கி கொண்டிருந்த இளஞ்செழியன் ஓடி வந்து மார்பில் ஏறி இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்..
நின்று எரிந்த அந்த குழந்தைகள் ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்து அழுவது போலிருந்தது.. 🙁
-கார்ட்டூனிஸ்ட் பாலா
இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்