தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு 2,000 புதிய பேருந்துகள்!
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்துகளின் மாதிரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆயிரத்து 900 பேருந்துகள் மற்றும் 100 சிற்றுந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு கூண்டு கட்டும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. புதிய வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள பேருந்துகளின் மாதிரிகள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. சிற்றுந்து மற்றும் பேருந்துகளின் மாதிரிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேருந்தின் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பார்த்த முதலமைச்சர், வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நடப்பு நிதியாண்டில் மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசு சிற்றுந்து சேவையை சென்னை மட்டுமின்றி மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.