தமிழகத்தில் 3 தினங்களுக்குள் இதனைசெய்ய வேண்டும்;மீறினால் ஒழுங்கு நடவடிக்கை – அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களில் உள்ள குறைபாடுகளை 3 தினங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.
இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக நேரலையாக கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 20.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி,கட்டுப்பாட்டு அறை பணிகள் நாள்தோறும் சிறப்பாக நடைபெற உரிய அறிவுரைகள் பார்வைக் குறிப்புகளின்படி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கோயில்களின் கண்காணிப்பு கேமராக்களை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆய்வு செய்ததில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளன.எனவே,இக்குறைகளை மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்து,இதுதொடர்பான விவரம் தெரிவிக்க அனைத்து முதுநிலைத் திருக்கோயில் நிர்வாகிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும்,மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை திட்டத்தினை வெற்றிகரமாக செயல் படுத்த வேண்டியது அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளின் தலையாய கடமை ஆகும்.இப்பணிகளில் எவ்வித சுணக்கமும் தடைகளே ஏற்படின் சம்மந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.