தமிழகத்தில் ஓராண்டில் 5.19 லட்சம் பேர் வேலை இழப்பு..!
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளதால் 5.19 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இது தொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மானியத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-17 நிதியாண்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக இருந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களினால் 2016-17ம் நிதியாண்டில் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் பெற்று வந்த வேலைவாய்ப்பு 13 லட்சத்து, 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது. அதாவது 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலை இழந்துள்ளனர்.இதனால் இந்நிறுவனங்களில் செய்ய வேண்டிய முதலீடு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.