தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை!
நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மழையின் தாக்கம் சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், நம்பியார் கோவிலுக்கு ஆற்றைக் கடந்து சென்ற பக்தர்கள், மறுகரைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டு வந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் மழை நீடித்து வருவதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல கிராமங்களில் போக்குவரத்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மண் சரிவால் கேரளாவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சூறைக்காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாலையோரங்களில் விழுந்து கிடக்கின்றன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.