தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறது என்ற நினைப்பே ஆளுநருக்கு இல்லை!
தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறது என்ற நினைப்பே இல்லாமல் ஆளுநர் தான் ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்.ஸ்டாலின், அவர் பதவி விலகுகின்ற வரையிலோ அல்லது அவரை பதவியில் இருந்து நீக்குகின்ற வரையிலோ, திமுக போராடும் என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின், இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று, மறியலில் ஈடுபட்டு கைதான திமுக தொண்டர்களை நேரில் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
பல மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று நேற்றே தெரிவித்தேன்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடக்கிறது, ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருப்பதுபோல, ஆளுநர் அவரே உத்திரவிட்டு, அவரே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதை எல்லாம் பார்க்கின்றபோது, அவர் கவர்னர் பொறுப்புக்கு லாயக்கற்றவர், மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எங்குப் பார்த்தாலும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதன்படி, திமுக சார்பில், ஆளுநர் மாளிகையை நோக்கி ஒரு பேரணி நடைபெற்று, மறியல் போராட்டமும் நடைபெற்றது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நேற்று அவர்களை கைது செய்தாலும், அவர் பதவி விலகுகின்ற வரையிலோ அல்லது அவரை பதவியில் இருந்து நீக்குகின்ற வரையிலோ, இந்தப் போராட்டம் நிச்சயமாக தொடரும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.