தமிழகத்தில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் கோரி முழு அடைப்பு நடைபெற்று வருகிறது…!
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
மதுரையில் மேலமாசி வீதி, கீழமாசி வீதி, பாண்டி பஜார், மீனாட்சி பஜார் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்துக் கடைகள் மட்டுமே ஓரளவு திறக்கப்பட்டுள்ளன. பரவை காய்கறி மார்க்கெட்டை வணிகர்கள் மொத்தமாக அடைத்தனர். மதுரையில் 90 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர். சில மருந்துக் கடைகள் மட்டுமே ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாயிரம் கடைகளை அடைத்து வணிகர்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளனர். மருந்துக் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. இதனால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாவட்டத்தில் 90 விழுக்காடு அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடியில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்துகள் – ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
சேலத்தில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் சின்னக் கடை வீதி, டவுன் , செவ்வாய்பேட்டை, சத்திரம், லீபஜார் பகுதிகள் வெறிச்சோடின. பட்டை கோவில் மற்றும் டவுனில் உள்ள அனைத்து நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சேலத்தில் இன்று வழக்கம் போல் ஆயிரத்து 48 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.