தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் – ரயில் மோதல்..!
அரியலூர் மாவட்டம் செந்துறை ரெயில் நிலையத்திற்கும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே பெரியாக்குறிச்சி பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
இந்த சுரங்கப்பாதையை கடந்துதான் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். இருப்பினும் பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீரை கடந்து சென்று வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. நேற்று சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அந்த வழியே சென்றனர்.
சுரங்கப்பாதை அருகே செல்லும் போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்ததால் பாதையை கடக்க அச்சமடைந்தனர். இதையடுத்து சுரங்கப்பாதை அருகே அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் வருவதை அறியாத இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தனர். ரெயில் அருகே வந்ததும் சத்தம் கேட்கவே, அதிர்ச்சியடைந்த இருவரும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
பின்னர் உயிர் பிழைக்க மோட்டார் சைக்கிளை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அதிவேகமாக வந்த ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜினில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ என்ஜின் மற்றும் அதன் பின்னால் இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது.
உடனடியாக சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ரெயிலில் இருந்த தண்ணீரை கொண்டு என்ஜின் மற்றும் பெட்டிகளில் பற்றிய தீயை அணைத்தனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.
தொடர்ந்து டிரைவர்கள் என்ஜின் மற்றும் பெட்டிகளில் ஏதாவது பழுது ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து, ரெயிலை இயக்கினர். இதன் காரணமாக பெரியாக்குறிச்சியில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
விருத்தாசலம் சென்றதும் என்ஜின் டிரைவர் நடந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் எரிந்த மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரிக்கும் போது, மோட்டார் சைக்கிள் செந்துறை பகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.