தடையை மீறி மெரினா கடற்கரையில் கூட்டம் கூடினால் நடவடிக்கை ஆணையர் எச்சரிக்கை..!
மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
மெரினாவில் போராட்டம், பொதுக்கூட்டம் உட்பட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தடை விதித்துள்ளார். இந்நிலையில், இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் உள்ளரங்குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன.
எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.