தஞ்சையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, வெறிபிடித்த 6 பேர் கைது…!
6 பேர் கொண்ட கும்பல் தஞ்சையில் ஆண் நண்பர் ஒருவருடன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
தஞ்சை பர்மா காலணியை சேர்ந்த பதினோறாம் வகுப்பு பயிலும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் சனிக்கிழமை இரவு வெட்டிக்காடு புது ஆற்றுப் பாலத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் ஓரத்தில் மணல் திருடிக் கொண்டிருந்த கார்த்தி, இளவரசன் ஆகிய இருவரும் மாணவியும், மாணவனும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தனர். பதுங்கி, பதுங்கி ஆற்றுப் பாலத்தை நெருங்கிய இருவரும், மாணவியுடன் இருந்த சிறுவனை அடித்து விரட்டியுள்ளனர். அவர்களைக் கண்டு பயந்து போன சிறுவனும், மாணவியை தனியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதை அடுத்து மாணவியை ஆற்றின் ஓரத்திற்கு தூக்கி சென்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் இளவரசன் என்பவன் தனது நண்பணான மற்றொரு இளவரசனுக்கு செல்போனில் அழைப்பு விடுத்ததன் பேரில் அவனும் அங்கு வந்து மாணவியை சீரழித்துள்ளான்.
இந்த குரூர சம்பவத்தில் அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த நடராசன், ரவிச்சந்திரன், செல்வம் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமையால் மாணவிக்கு வலிப்பு ஏற்பட்ட போதும், மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அந்த வெறி பிடித்த கும்பல். சிறிது நேரம் கழித்து அடித்து விரட்டப்பட்ட மாணவன் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளான். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரையும் பிடித்த உறவினர்கள் தஞ்சை தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆற்று மணலில் குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்த மாணவியை மீட்ட அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள தஞ்சை தாலுகா மற்றும் வல்லம் மகளிர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பாவி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழும் அதே வேளையில், பள்ளிப் பருவத்தில் பெண் எங்கு செல்கிறாள்.. என்ன செய்கிறாள்.. என்பதைக் கண்காணிக்க வேண்டிய கடமையை தவறும் பெற்றோர், இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் பாடமாகவும் இச்சம்பவம் அமைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.