டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியால் தலப்பாகட்டி பிரியாணிக்கு வந்த சோதனை..!
நாமக்கல் அருகே உள்ள தலப்பாகட்டி பிரியாணி கடையில் சிக்கன் குழம்பு கெட்டுபோய்விட்டதாக கூறி ரகளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று கடைக்குள் புகுந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தலப்பாகட்டி பிரியாணி ஓட்டல் உள்ளது. இந்த கடைக்கு கடந்த 10 ந்தேதி சென்னையை சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திருநங்கை ரோஸ் என்பவர் தனது தோழி கீர்த்தனாவுடன் சாப்பிட சென்றுள்ளார்.
அவர்களுக்கு பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டிய இருவரும் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டனர்
தனது ஆதரவாளர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்த அவர்கள் பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தை பாதிக்கப்பட்டதாக கூறி கடையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பயன்படுத்தி ஓட்டலில் சாப்பிட்ட இருவர் பணம் கொடுக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் பிரச்சனையை சுமூகமாக முடிக்கும் வகையில் கடையை பூட்டிவிட்டதாக கூறி கடையின் முன்பக்க கதவின் சாவியை காண்பித்து அவர்களை சமரசப்படுத்தினர்.
ரோஸ் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றுவிட அவர்களுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் கடையின் பின்பக்க வாசல் வழியாக தலப்பாகட்டி பிரியாணி கடைக்குள் புகுந்து அங்கிருந்த பிரியாணி மற்றும் பொறித்த சிக்கனை எடுத்து வந்து வாசலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பணம் ஏதும் கொடுக்காமல் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே ரோஸ், மற்றும் கீர்த்தனா ஆகியோர் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் சான்றளித்தார். மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ் என்பவரும் ஓட்டலில் உள்ள உணவுவகைகளை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
தலப்பாகட்டி ஓட்டலில் உணவு துர்நாற்றம் வீசுவதாக கூறி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரோஸ், கீர்த்தனா ஆகியோரின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் புஷ்பராஜ் தெரிவித்தார்.
பொதுவாக உணவு சரியில்லை என்றோ கெட்டுபோய்விட்டதாகவோ கருதும் வாடிக்கையாளர் அங்கிருந்தபடியே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் இங்கே உணவு சரியில்லை என்று கிளர்ச்சி செய்த போராளிகள் புகார் ஏதும் செய்யாமல், ஓட்டலில் புகுந்து ஊழியர்களை மிரட்டி ஓசியில் சிக்கனும், பிரியாணியும் சாப்பிட்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது..!