ஜேஇஇ நுழைவுத்தேர்வு: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி..!
ஜேஇஇ பொறியியல் படிப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ. சாந்தி மேற்பார்வையில் மாதிரித் நுழைவுத்தேர்வை நடத்தி அதில் தேர்வு செய்யப்பட்ட 30 மாணவ, மாணவியருக்கு கடந்த ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு தனியார் அமைப்புகள் பண உதவி செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 30 பேரும் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு சனி, ஞாயிறு உட்பட பள்ளி விடுமுறை தினங்களில் ஜேஇஇ (Joint Entrance Exam) முதன்மை நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி கொடுத்தனர். இந்த தேர்வு ஏப்.8-ம் தேதி நடந்தது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள்;
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூறியதாவது: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எம்.யாதேஷ்வரராம், எஸ்.விக்னேஷ், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்.அருணாச்சல ஈஸ்வர், பல்லடம் அருகே கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சரவணன், ஊத்துக்குளி வட்டம் வெள்ளிரவெளியை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஞானமூர்த்தி ஆகிய 5 பேர் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் எம்.யாதேஷ்வரராம் அதிகபட்சமாக 89 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் 5 பேரும் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதால், தற்போது என்ஐடி கல்லூரியில் சேர தகுதி பெற்றுவிட்டனர். இதன்பின் ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வை மே 20-ம் தேதி எழுதி உள்ளனர் என்றார்.
மேலும், இது குறித்து மாணவர்கள் கூறியதாவது: எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இலவசமாக அளிக்கப்பட்ட பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, நடத்தப்படும் தேர்வு இது. இந்த முதன்மைத் தேர்வில் அரசு பள்ளியில் படித்து நாங்கள் தேர்ச்சி பெற்றிருப்பது தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இல்லை. அடுத்தக்கட்டமாக ஜேஇஇ. அட்வான்ஸ் தேர்வும் எழுதி உள்ளோம். இதில் தேர்ச்சி பெற்றால் ஐஐடியில் இடம் கிடைக்கும். எங்களின் கனவும் நனவாகும் என்றனர் மிகவும் பெருமிதமாக. இதுகுறித்து மாணவரின் தந்தை கூறியதாவது: என்ஐடி கல்லூரியில் சேர்வதற்கு தகுதி பெற்றிருந்தாலும், அங்கு சென்று சேர்ந்து படிக்க ஆண்டுக்கு ரூ. 2லட்சம் செலவாகும் என தெரிகிறது. தற்போதைய குடும்ப சூழ்நிலையில், இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாது. அரசு பள்ளியில் படித்து ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் இந்த மாணவர்கள் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான செலவை அரசே ஏற்கவேண்டும் என்றனர்.
முன்னதாக ஜேஇஇ தேர்வு பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஒருவர் வந்து செல்லும் செலவு, தங்கும் இடம், உணவு, பயிற்சிக்கான கட்டணம் என ஒருவருக்கு ரூ. 3000-ம் செலவாகியது. ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் செலவு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பொறியியல் படிப்பை என்ஐடி, ஐஐடி உட்பட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து பயிலலாம் என உதவி செய்தவர்கள் சிலர் கூறினர்.