ஜெயலலிதா தொடர்பான அனைத்து வீடியோவையும் 7 நாட்களில் கொடுங்க..!!
சென்னை;
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார் என்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியதாகவும் மொத்த சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா்.
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி விசாரணை ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையின் எதிரொலியாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஜெயலலிதா சிகிச்சையின் போது, அப்பல்லோ மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதிக்கான சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார்? சோதனைக்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் என்ன ஆனது? எனவே அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மொத்த சிசிடிவி பதிவுகளை 7 நாட்களுக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.