ஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படத்தை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் வீரமாமுனிவர், தமிழகம் வந்த பிறகு, முதலில் தைரியநாதர் எனப் பெயர் சூட்டிக் கொண்டார். பின்னர் வடமொழிக் கலப்பை நீக்கி வீரமாமுனிவர் என பின்னர் பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்துள்ள தொண்டுகளால், தமிழ் உள்ளளவும் வீரமாமுனிவர் பெயரும் இருக்கும் என கூறினார்.ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் சர்கார் திரைப்படத்தில் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அழுதுபுரண்டாலும், தலைகீழாக நின்றாலும் நடிகர் விஜய் எம்ஜிஆர் ஆக முடியாது. ஒரே எம்.ஜி.ஆர் தான். ஜெயலலிதா இருக்கும் போது இதுபோன்ற திரைப்படம் எடுக்க முடியுமா?. அப்போது அவர் இது போன்று படம் எடுத்திருந்தால் உண்மையாக அவர்களது வீரத்தை மெச்சி இருப்போம்.
தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவரின் எண்ணங்களை சிதைக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவரின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில், படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை.பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டிய நீதிபதிகள் மக்கள்தான் என்றும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அதற்கான விடை கிடைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.