ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது..!!என மெரினா கடற்கரையில் போலீஸ் குவிப்பு..!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நெஞ்சை பதற வைத்த பயங்கர சம்பவம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர்.
மேலும் பல மாணவர் சமூக பொது நல அமைப்புகள் மெரினாவில் திரள்வதாக தகவல் பரவின. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் கூட்டமாக வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அலுவலகம் முதல் அண்ணா சமாதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் ஒன்று திரண்டு விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ரோடு உள்ளிட்ட கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 3 இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ்படை குவிக்கப்பட்டு இருப்பதால் மெரினா சாலை வாகனங்கள் அதிகமின்றி வெறிச்சோடியது
போரட்டக்காரர்கள் எந்த வழியாக வந்தாலும் அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி இருப்பதால் பாரி முனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட மீனவப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வன்முறை சம்பவத்திற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் செய்துள்ளது. தலைமை செயலகத்திற்கு பணிக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் கூட தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டனர். தலைமை செயலகம் எதிரே நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் எந்த பகுதியில் போராட்டம் நடந்தாலும் அதனை முறையாக கையாள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்