ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணை 7 மாதங்கள் நீடிப்பு..!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அவற்றின் பாதிப்புகள் பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். அதன்படி கோவையில் 5-ம் கட்ட விசாரணை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று தொடங்கியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியதாவது:-
கோவையில் 5-ம் கட்ட விசாரணை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. அந்த விசாரணை நாளையுடன்(வெள்ளிக்கிழமை)முடிவடைகிறது. கோவையை பொறுத்தவரை 50 பேர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நாங்கள் 29 பேருக்கு சம்மன் கொடுத்து இருந்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5-ம் கட்டமாக 13 பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.
இந்த விசாரணை கமிஷன் முன்பு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆஜராக உள்ளனர். ஏற்கனவே 2 உதவி கமிஷனர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
சென்னை, மதுரையை பொறுத்தவரை விசாரணை தொடர்ந்து நடைபெறும். கோவையில் பாதி பேர் போலீசுக்கு ஆதரவாகவும், பாதி பேர் போலீசுக்கு எதிராகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகாதவர்களை மீண்டும் அழைக்க மாட்டோம்.
மதுரையில் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அலங்காநல்லூரில் போராடியவர்களும் போலீசாருக்கு ஆதரவாக தான் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையில் விசாரணை இன்னும் 6 அல்லது 7 மாதங்கள் வரை நீடிக்கும். மொத்த விசாரணை முடிந்த பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். நேற்று நடந்த விசாரணை கமிஷன் முன்பு போலீஸ் துணைகமிஷனர் லட்சுமி ஆஜரானார்.